மஸார் இ ஷரிஃப்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,200 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மஸார் இ ஷரிஃப்புக்கு அருகில் உள்ள கோல்ம் நகரில் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் காபூலில் இருந்த ஏஎஃப்பி செய்தியாளர்கள் நில அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உதவி தேவைப்படுவோர் பயன்படுத்தக்கூடிய அவசரகால அழைப்பு எண்களை ஆப்கானிய அதிகாரிகள் உடனடியாக ஒலிபரப்பு செய்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மஸார் இ ஷரிஃப்பில், மக்கள் இரவு வேளையில் பீதியடைந்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடினர்.
கட்டடங்கள் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் மேலோங்கி இருந்தது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
குறி்ப்பாக, இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகளில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
மேலும், வசதி குறைந்த ஆப்கானிய மக்கள் பலரது வீடுகள் குடிசைகள் போன்றவை. நில அதிர்வுகளில் அவை எளிதில் இடிந்து விழக்கூடியவை.
அதுமட்டுமல்லாது, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளை நடத்துவது மிகவும் சவால்மிக்கதாக அமைந்துவிடுகின்றன.


