தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஜனவரி 13ஆம் தேதி பின்னேரம், 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தகவல் அளித்ததை அடுத்து, அதிகாரிகள் அந்தப் பகுதியில் வசிப்போருக்கு சுனாமி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மியாஸாகி மாநிலத்தின் கியுஷு வட்டாரத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 13) இரவு 9.19 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இருக்காது என்கிறது அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம்.
இருந்தபோதும், பொதுமக்கள் கடற்பகுதியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று ஜப்பானிய வானிலை ஆய்வகம் வலியுறுத்தியுள்ளது.
“சுனாமி அலைகள் தொடர்ந்து தாக்கக்கூடும். கடலுக்குள்ளோ கடற்கரைப் பகுதிகளுக்கு அருகிலோ செல்லவேண்டாம்,” என்று எக்ஸ் தளப் பதிவில் அது கேட்டுக்கொண்டுள்ளது.