காட்மாண்டு: நேப்பாளத்தில் சுற்றுப்பயண ஹெலிகாப்டர் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
எவரெஸ்ட் மலைப்பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாக விமானத் துறை அதிகாரிகள் கூறினர்.
அந்த மனாங் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தலைநகர் காட்மாண்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதில் மெக்சிகோவைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் நேப்பாள விமானியும் இருந்தனர்.
செவ்வாய்க்கிழமை விடிகாலையில் புறப்பட்ட எட்டு நிமிடங்களில் ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஆறு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டு காட்மாண்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தின் பொதுச் செயலாளர் திவாரி, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தேடல், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ, இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. ஆனால் வானிலை காரணமாக அவற்றால் சம்பவ இடத்தில் தரையிறங்க முடியவில்லை. அருகில் உள்ள பகுதியில் தரையிறங்கிய அந்த ஹெலிகாப்டர்களுக்கு, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சடலங்களைக் கொண்டுசென்றனர்.
இந்நிலையில், பிரதமர் புஷ்பா கமல் தகல் சம்பவம் குறித்துக் கவலை தெரிவித்ததாக அவரது அலுவலகம் டுவிட்டரில் குறிப்பிட்டது.

