பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய வட்டாரத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 3) அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அந்நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. பெரும் சத்தங்களுடன் வெடிப்பு நிகழ்ந்ததை அறிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறினார்.
லெபனான் நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள பாச்சவுரா நகரின் கட்டடம் ஒன்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. இது, இஸ்ரேலியப் படைகள் லெபனான் அரசாங்கத் தலைமையகத்தை நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது.
அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்ததோடு ஏழு பேர் காயமடைந்ததாக லெபனான் அதிகாரிகள் கூறினர். கடுமையாகச் சேதமடைந்த கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் தீப்பற்றி எரிவதைக் காட்டும் படம் ஒன்று லெபனானைச் சேர்ந்த வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தப் படத்தின் உண்மைத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதி செய்ய இயலவில்லை.
கடந்த வாரம் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட அதே டஹியே நகரின் வெளிப்புறத்தில் மூன்று ஏவுகணைகளையும் இஸ்ரேல் வீசியது.
இவ்வாரத் தொடக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. அந்தச் செயல் இஸ்ரேலை மட்டுமல்லாது அதனை ஆதரிக்கும் பல்வேறு நாடுகளையும் சினமடையச் செய்தது.
கத்தாரின் எமிர் ஷேக் தமிம் ஹமத் அல்-தானி, லெபனானில் இஸ்ரேலின் “ஆக்கிரமிப்பைத்” தடுக்க தீவிரமான போர்நிறுத்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் பாலஸ்தீன அரசை உருவாக்காமல் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றார்.
“மத்திய கிழக்கில் நடப்பது ஒரு கூட்டு இனப்படுகொலை,” என்று டோஹாவில் நடந்த ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் உச்சநிலை மாநாட்டில் அவர் கூறினார். இஸ்ரேலின் ‘தண்டனையின்மை’ குறித்து தனது நாடு எப்போதும் எச்சரித்து வந்துள்ளது என்றும் அவர் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதே கூட்டத்தில் பேசிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், இஸ்ரேலின் போர்வெறியைச் சகித்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடியாது என்று எச்சரித்தார்.
“எந்தவிதமான ராணுவத் தாக்குதல், பயங்கரவாதச் செயல் அல்லது நமது சிவப்புக் கோட்டைக் கடப்பது போன்றவற்றுக்கு எதிராக நமது ஆயுதப் படைகளால் தீர்க்கமான பதிலடி கொடுக்க முடியும்,” என்றும் அவர் சூளுரைத்தார்.