பள்ளியில் நஞ்சு வைப்பு; 60 பேர் பாதிப்பு

1 mins read
cb5e270e-5dc3-40ea-9643-c8e1c376f982
பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் நலத்துடன் இருப்பதாகக் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார். கோப்புப்படம்: ஏஎஃப்பி -

ஆஃப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நஞ்சு வைக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 60 மாணவிகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சார்-இ-போல் எனும் மாநிலத்தில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றை இலக்காகக் கொண்டு இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டது.

ஆஃப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, பதின்மவயதுப் பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதிலிருந்து, அங்கு பெண்கள் கல்விபெறுவது பெரிதும் சிரமமாகி இருக்கிறது.

இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலர், சஞ்சராக் மாவட்டத்தில் உள்ள அந்தப் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளில் நஞ்சு வைத்ததாகவும் அதனால் வகுப்பறைக்குள் நுழைந்ததும் அந்தப் பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் காவல்துறைப் பேச்சாளர் டென் முகம்மது நஸரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 'நல்ல நிலையில்' இருப்பதாகவும் திரு நஸரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை.

இதற்கு முன்னர், அண்டை நாடான ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் நஞ்சு வைக்கும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன.

கடந்த நவம்பரிலிருந்து அங்கு இடம்பெற்ற அத்தகைய சம்பவங்களில் கிட்டத்தட்ட 13,000 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.