60 விழுக்காடு ஊழியர்களுக்கு எடை அதிகம்: பெர்கேசோ

60 விழுக்காடு ஊழியர்களுக்கு எடை அதிகம்: பெர்கேசோ

1 mins read
b9ca9772-aaa8-4ba8-b794-739fc9385ddd
மேலும் ஆய்வு செய்யப்பட்டதில் பலருக்கு நீரிழிவு நோய், உயர் ரதத அழுத்தம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: என்வாடோ எலிமெண்ட்ஸ்

புத்ராஜெயா: பெர்கேசோ எனும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த சுகாதாரப் பரிசோதனையில் ஏறக்குறைய அறுபது விழுக்காட்டு ஊழியர்கள் (59.2%) அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசிய மனிதவளத் துணை அமைச்சர் கைரூல் ஃபிர்டாவுஸ் அக்பர் கான் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

அவர்களில் 19 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோயும் 17.45 விழுக்காட்டினருக்கு உயர் ரத்தம் அழுத்தம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

இதே பரிசோதனையில் சுமார் 59.24 விழுக்காட்டினருக்கு அதிக கொழுப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆபத்து, முக்கியமாக 40 முதல் 59 வயதுக்குட்பட்ட ஊழியர்களிடையே காணப்படுகிறது.

“ஓய்வுக்கு முந்தைய காலகட்டம் ஓர் முக்கியமான காலகட்டமாக நாம் உணர வேண்டும். தொற்றாத நோய்களின் ஆபத்துக்கான காலகட்டமாகவும் அது உள்ளது,” என்று அவர் கூறினார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெர்கேசோ ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மலேசியர்களிடையே இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாகத் தொடரும் புற்றுநோய் குறித்தும் கைரூல் கவலை தெரிவித்தார். இது தற்போது இளம் வயதினரையும் அதிகளவில் பாதிக்கிறது என்றார் அவர்.

“தொற்றாத நோய்களின் அபாயங்கள் குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. ஊழியர்கள் இந்த அபாயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சமச்சீர் உணவையும் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்