காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் அதிவேகமாகப் பரவி வரும் ‘இபோலா பண்டிபுக்யோ’ எனும் உயிருக்கு ஆபத்தான நச்சுக்கிருமிக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, கிருமித்தொற்று தயார்நிலைக்கான புத்தாக்க கூட்டணி மொடெர்னா உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு ஏறத்தாழ $60 மில்லியன் நிதியுதவி வழங்கவுள்ளது.
முன்பு கொவிட்-19 நெருக்கடிநிலை உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசியை உருவாக்க ஆரம்பக்கட்ட முதலீடு செய்த அமைப்புகளில் இந்தக் கூட்டணியும் ஒன்றாகும். ‘இபோலா பண்டிபுக்யோ’ பாதிப்புக்கு என தற்போதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துச் சிகிச்சைகளோ எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த இபோலா நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை இன்னும் ஒருசில மாதங்களில் மருத்துவப் பரிசோதனைக்குத் தயார் செய்துவிட முடியும் என்று கூட்டணியின் தலைவர் ரிச்சர்ட் ஹாட்செட் தெரிவித்துள்ளார்.
“இந்தக் கொடிய நோய்க்கு எதிரான பந்தயத்தில் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஓரளவுக்குத் தெரிவதால் இதனை யார் வாங்குவது மற்றும் விநியோகிப்பது போன்ற நிதி தொடர்பான ஆலோசனைகளை இப்போதே தொடங்குவது நல்லது,” என்று அவர் கூறினார்.
அதே வேளையில், தடுப்பூசி மேம்பாடு என்பது கணிக்க முடியாத ஒன்று என்றும் காங்கோவின் கிழக்குப் பகுதியில் நிலவும் சவால்மிக்க பாதுகாப்புச் சூழல் காரணமாக அங்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் சிக்கலானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் மற்றும் உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த இபோலா பரவலால் இதுவரை 282 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1,100 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவைத் தவிர, அண்டை நாடான உகாண்டாவிலும் ஒன்பது பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அங்கு ஓர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உலகளாவியச் சுகாதார அமைப்புகள் இந்தப் பரவலைப் ‘பொதுச் சுகாதார அவசரநிலை’ எனப் பிரகடனப்படுத்தியுள்ளன.

