கோலாலம்பூர்: கொவிட்-19 தடுப்பூசியைப்போட்டுக்கொண்ட பிறகு பாதகமான சுகாதாரச் சிக்கல்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதும் உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் கூட்டாக எட்டு மலேசியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த எண்மரில் ஒரு மருத்துவரும் அடங்குவார்.
வழக்கு தொடுத்தோர் 26 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அக்டோபர் 23ஆம் தேதி தொடுத்த வழக்கில் அன்வார், உலக சுகாதார நிறுவனத்தைத் தவிர மேலும் 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.
அந்த 23 பேரில் முன்னாள் பிரதமர்கள் முகைதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சுகாதார அமைச்சு, அரசாங்கம், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெபிரியேசுஸ், சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது, அவருக்கு முன்பாக சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் முகம்மது ரட்ஸி முகம்மது ஜிடின், அதாம் பாபா, கைரி ஜமாலுதீன், முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முதலியோர் இடம்பெற்றுள்ளனர்.
வழக்கு தொடுத்த சிலர், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பாதக விளைவுகளைச் சுகாதார ரீதியாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தடுப்பூசிக்குப் பிறகு சுகாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தாரும் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொவிட்-19 போலியான ஒரு கொள்ளைநோய் என்பதை நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்த எண்மரும் கோருகின்றனர். அத்துடன் சளிக்காய்ச்சல் வடிவில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியப் போர்க்கருவிதான் கொவிட்-19 என்றும் நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என்றனர் அந்த எண்மர்.
மொத்தம் 60 மில்லியன் ரிங்கிட்டை (S$18,147,077.71) அவர்கள் இழப்பீடாகக் கோரியுள்ளனர்.