கோலாலம்பூர்: ஜனவரி மாதத்தில் காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை ஓர் அறிக்கையில், ஜனவரி மாதத்தில் 100 காதல் மோசடிச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 95 சம்பங்களாக இருந்தன என்று சினார் ஹரியான் நாளிதழ் தெரிவித்தது.
ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் ஐந்து சம்பவங்கள் அல்லது தோராயமாக 5.3 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகின்றன என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 16) ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த இழப்பு 3.5 மில்லியன் ரிங்கிட் ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட மொத்த இழப்பு 4.9 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது 27 விழுக்காடு குறைவு என்று அது மேலும் கூறியது.
அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 72 விழுக்காட்டினர் 30 முதல் 50 வயதுடையவர்கள். இந்த வயதினரே இத்தகைய மோசடி கும்பல்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை அறிக்கை கூறுகிறது.
இணையத்தில் உறவுகளை ஏற்படுத்த முயலும் முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 997 என்ற எண்ணை அழைக்கவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

