மலேசியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மகிழ்நடை விபத்துகளில் 63 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மகிழ்நடை விபத்துகளில் 63 பேர் உயிரிழப்பு

2 mins read
f0c7c078-81a7-4fe6-b7f6-cd3527c82e64
2021 முதல் 2025 வரையிலான பதிவுகளின்படி, மொத்தம் 1,059 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியா முழுவதும் மகிழ்நடை (Hiking) விபத்துகளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மொத்தம் 1,059 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2021 முதல் 2025 வரையிலான பதிவுகளின்படி, மொத்தம் 1,059 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான துணை அமைச்சர் சையது இப்ராஹிம் சையது நோ கூறினார்.

தீபகற்ப மலேசிய வனத்துறை மற்றும் வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறை ஆகியவற்றின் மூலம், வனப் பொழுதுபோக்கு, மகிழ்நடை நடவடிக்கைகளின் பாதுகாப்பு அம்சங்களை அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது என்று அவர் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மகிழ்நடை நடவடிக்கைகளால் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது இஸாம் முகமது இஸா கேட்ட கேள்விக்கு சையது இப்ராஹிம் பதிலளித்தார்.

அனைத்து மகிழ்நடைப் பாதைகளுக்கும் ஒரு தேசிய பாதுகாப்புத் தரத்தை அமைக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்றும் முகமது இஸாம் கேட்டார்.

“ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியுதவியுடன் வனத்துறை, மோகிராம் (MoGRAM) என்று அழைக்கப்படும் மலை இடர் மதிப்பீடு மற்றும் மேலாண்மைக்கான ஒரு தேசிய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என்று சையது இப்ராஹிம் கூறினார்.

இந்த வழிகாட்டுதல், இடரைக் குறைப்பதற்கும், ஒரு பாதையில் ஒரே நேரத்தில் எத்தனை மகிழ்நடையர்கள் பயணிக்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கும் ஒரு தொழில்நுட்பக் குறிப்பாகச் செயல்படுகிறது.

அதிக அபாயம் உள்ள 189 மகிழ்நடைப் பகுதிகளில், சான்றளிக்கப்பட்ட வனத்துறை மகிழ்நடை வழிகாட்டிகளை அத்துறை கட்டாயமாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பழங்குடியினர் உட்பட உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 2,322 பேருக்கு இதுவரை வழிகாட்டிகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று சையது இப்ராஹிம் தெரிவித்தார்.

மகிழ்நடையில் ஈடுபடுபவர்கள் இனி முன்கூட்டியே உடல்நலப் பரிசோதனை செய்துகொண்டு, தாங்கள் மேற்கொள்ள விரும்பும் பாதையின் தரத்திற்குத் தாங்கள் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வனத்துறைசுற்றுச்சூழல்பாதுகாப்பு