புத்ராஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) குடிநுழைவு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாமல் மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 64 வெளிநாட்டு ஆடவர்களை அந்நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு (ஏகேபிஎஸ்) தடுத்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் அந்த ஆடவர்கள் தடுக்கப்பட்டனர் என்று தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது. தடுக்கப்பட்டவர்கள் 57 பேர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள், ஐவர் இந்தியர்கள், இருவர் பாகிஸ்தானியர்கள்.
புதன்கிழமையன்று (மே 14) நடந்த குடிநுழைவுச் சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் குடிநுழைவுச் சோதனை நடவடிக்கையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். பிடிபட்டவர்களில் சிலர் ஏமாற்று உத்திகளைக் கொண்டு அதிகாரிகளை திசை திருப்ப முயன்றதாகவும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.
செல்லுபடியாகாத ஹோட்டல் பதிவுகள் மற்றும் நாடு திரும்புவதற்கான விமான நுழைவுச்சீட்டுகள் போன்றவற்றை அந்நபர்களில் சிலர் பயன்படுத்தி அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடுகள் மிகுந்த உயர் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த இந்தக் குடிநுழைவுச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

