வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிக டாக்சி கட்டணம் வசூலித்ததாக 6,400 புகார்கள்

வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிக டாக்சி கட்டணம் வசூலித்ததாக 6,400 புகார்கள்

படம்: இபிஏ

18 Oct 2026 - 8:55 pm

1 mins read

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் வெளிநாட்டுப் பயணிகளிடம் டாக்சி கட்டணத்தை அதிகமாக வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகார்களில், 2021 முதல் 2026 ஆகஸ்ட் வரை 3.1 விழுக்காட்டுப் புகார்களில் மட்டுமே நிர்வாகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தார்.

பதிவான 6,481 புகார்களில், 204 புகார்கள் தொடர்பில் மட்டும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மோ கியோங்-ஜோங் பெற்ற சோல் மாநகராட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அவற்றில் 176 புகார்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 26 புகார்களில் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்தும் இரண்டு புகார்களில் உரிமம் ரத்தும் செய்யப்பட்டன. மேலும் 1,865 வழக்குகள் சட்டபூர்வ விளைவுகள் இல்லாத எச்சரிக்கையுடனும் வழிகாட்டுதலுடனும் முடித்து வைக்கப்பட்டன.

டாக்சி போக்குவரத்து வணிக மேம்பாட்டுச் சட்டத்தின் திருத்தப்பட்ட அமலாக்க விதியின்படி, செப்டம்பர் 4 முதல் ஓட்டுநர்களுக்கு முதல் குற்றத்திற்கு உரிமம் 30 நாள்களுக்கு ரத்து செய்யப்படும். இரண்டாவது குற்றத்திற்கு உரிமம் 60 நாள்களுக்கும் மூன்றாவது குற்றத்திற்கு அது நிரந்தரமாகவும் ரத்து செய்யப்படும்.

முந்தைய விதிகளின்படி, வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்ததாக முதன்முறையாக பிடிபட்டோர்க்கு எச்சரிக்கை மட்டுமே விதிக்கப்பட்டது.

மொத்த புகார்களில் 67.4 விழுக்காடான 4,368 புகார்கள் எந்த நிர்வாகத் தண்டனையுமின்றி முடிக்கப்பட்டதால், இந்த முறையின் பயன் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 44 புகார்கள் குறித்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாசோல்டாக்சி