உக்ரேனுக்கு $65 பில்லியன் கடன் வழங்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளது: அமெரிக்க நிதி அமைச்சர்

உக்ரேனுக்கு $65 பில்லியன் கடன் வழங்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளது: அமெரிக்க நிதி அமைச்சர்

2 mins read
f7db5473-2438-4184-894b-4c970079cab3
அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: உக்ரேனுக்கு US$50 பில்லியன் (S$65 பில்லியன்) கடன் அளிப்பதற்கான இறுதி நடவடிக்கையில் ஜி7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் தெரிவித்து உள்ளார்.

அதில், ஏறத்தாழ US$20 பில்லியனை அமெரிக்கா அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக பண நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் யெல்லன் பேசினார்.

ரஷ்யாவின் அரசுரிமைச் சொத்துகளில் பெரும்பாலானவற்றை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கி உள்ளது. அவை தொடர்ந்து முடக்கப்பட்டு இருக்கும் என்பதில் தாம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக திருவாட்டி யெல்லன் கூறினார்.

“உக்ரேனுக்கான US$50 பில்லியன் கடனில் அமெரிக்காவின் பங்கை இறுதி செய்வதில் கடைசிக்கட்டத்தில் உள்ளோம்,” என்றார் அவர்.

ஆண்டு இறுதிக்குள் உக்ரேனுக்குக் கடன் போய்ச் சேருவது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இந்தப் பதிலை அளித்தார்.

“முக்கியமாக, உக்ரேனுக்கு அளிக்கப்படும் கடன்தொகை அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படாது. மாறாக, முடக்கப்பட்டு உள்ள ரஷ்யச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாய் கடனாகத் தரப்படும்,” என்றார் டாக்டர் யெல்லன்.

ஸெலென்ஸ்கி வேண்டுகோள்

இதற்கிடையே, ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவாக வடகொரியா செயல்படுவது குறித்த தடயங்களுக்குப் பதில் அளிக்குமாறு நட்பு நாடுகளுக்கு உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எதையும் மறைக்க வேண்டாம் என்றும் அந்த நாடுகளை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

ரஷ்யப் படைகளுடன் 12,000 வடகொரிய வீரர்கள் இணைந்து போரிட ஆயத்தமாவது பற்றிய தகவல் உக்ரேனிடம் உள்ளதாக திரு ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

“வடகொரியா ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டுவது குறித்துப் பேசுகையில், இது ஒரு சவால். ஆனால், இந்த சவாலுக்கு எந்த வகையில் பதில் தருவது என்பது தெரியும். அதேநேரம், இந்த சவாலில் உள்ள தகவல்களை நமது பங்காளிகள் மறைக்கக்கூடாது என்பது முக்கியம்,” என்று அவர் தமது இரவுநேர உரையில் குறிப்பிட்டார்.

3,000 வீரர்களை வடகொரியா அனுப்பியது

இந்நிலையில், ரஷ்யாவுக்கு வடகொரியா 3,000 ராணுவ வீரர்களை அனுப்பி இருப்பதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (அக்டோபர் 23) கூறினர்.

தேசிய உளவுத்துறையிடம் பேசிய பின்னர் தாங்கள் இதனைத் தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

3,000 வீரர்கள் என்பது ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்ப இருப்பதாக இதற்கு முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் இருமடங்கு.

ஏறத்தாழ 10,000 ராணுவ வீர்களை ரஷ்யாவுக்கு ஆதரவாக அனுப்ப வடகொரியா உறுதி பூண்டிருப்பதாகவும் அந்தப் பணியை ஆண்டிறுதிக்குள் முடிக்க அது திட்டமிட்டு இருப்பதாகவும் தென்கொரிய எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

குறிப்புச் சொற்கள்