ஓஸ்லோ: நார்வேயின் ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில், தூங்கிக்கொண்டிருந்த பனிக்கரடியை கப்பலின் மூடுபனி எச்சரிக்கைச் சங்கை ஊதி எழுப்பிய நபருக்கு 50,000 குரோனர் (S$6,724) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் வடகிழக்கு ஸ்வால்பார்ட்டில் உள்ள ஃஜியோர்டு பகுதியில் கப்பலில் பயணம் செய்த சிலர், கரையில் பனிக்கரடி ஒன்று தூங்குவதைக் கண்டனர்.
அப்போது கப்பலில் இருந்த ஒருவர் எச்சரிக்கைச் சங்கை எழுப்பியதால், விழித்தெழுந்த அந்த விலங்கு வேறு இடத்துக்கு நகர்ந்து சென்றது.
1972ஆம் ஆண்டு முதல் ஸ்வால்பார்ட்டில் பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் சட்டவிதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட பனிக்கரடிகளைத் தேவையின்றி தொந்தரவு செய்வது அல்லது விரட்டுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விதி மீறிய அந்த நபருக்கு அப்பகுதியின் ஆளுநர் அலுவலகம் அபராதம் விதித்தது.
அந்த நபரும் அபராதத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் மற்றும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.


