தைப்பே: அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட ‘மைக்ரோன்’, பகுதிமின்கடத்தி உற்பத்தியின் முன்னோடி என்பதோடு, கணினிச் சில்லுகள், தரவு சேமிப்புச் சேவை போன்ற பலவகை வர்த்தகங்களை இயக்கிவரும் அனைத்துலக நிறுவனம் ஆகும்.
2026ஆம் நிதியாண்டு அந்நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்திற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதால், தைவானில் பணியாற்றும் அதன் நேரடி ஊழியர்கள் ஒவ்வொருவரும் 35 முதல் 68 மாத ஊதியத்தைச் சிறப்பு வழங்குத் தொகையாகப் பெறுவர் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு ஊழியர் அடிப்படைத் தொகையாக S$68,220 (US$53,809.39) வரை பெறுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பணியாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், பொறியாளர்கள் என உலகளாவிய ஏறத்தாழ 60,000 ஊழியர்கள் இந்த வழங்குத் தொகைக்குத் தகுதி பெறுவர் என்று மைக்ரோன் தெரிவித்தது.
தைவானில் உள்ள மைக்ரோன் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கைப் பிரதிநிதிக்கும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் நடத்த ஆதரவு பெருகியுள்ளதை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அந்த சங்கங்கள் மைக்ரோன் வழங்குதொகை அறிவிப்பு குறித்து எவ்விதக் கருத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
2025 ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு முன் நிறுவனத்தில் சேர்ந்த தைவான் ஊழியர்களுக்கு அந்த சிறப்புத் தொகையில் $40,130 ரொக்கமும் உட்படும் என்று மைக்ரோன் தெரிவித்தது.
அனைத்து தைவான் ஊழியர்களுக்கும் மைக்ரோன் ஆண்டுதோறும் வழங்கும் பங்கு ஒதுக்கீடுகளும் வழங்கப்படவுள்ளன.

