காத்மாண்டு: நேப்பாளத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் இறந்துவிட்டனர்; பலர் காயமடைந்தனர்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் குலுங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவாகப் பதிவானது என்று நேப்பாள தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்தது. பின்னர், அதன் அளவு 5.7 ரிக்டர் என்று ஜெர்மானிய நிலவியல் ஆய்வு மையமும் 5.6 ரிக்டர் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு மையமும் குறிப்பிட்டன.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியான ஜாஜர்கோட் மாவட்டத்திலுள்ள ராமிடாண்டாவிற்கு இன்னும் அதிகாரிகளால் செல்ல முடியவில்லை எனக் கூறப்பட்டது.
அந்த மலைப்பகுதி மாவட்டத்தில் 190,000 பேர் வசிக்கின்றனர்.
அம்மாவட்டத்தில் குறைந்தது 34 பேர் மாண்டுபோனதாகவும் அதனையொட்டி இருக்கும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அதிகாரிகள் சென்றபிறகுதான் உயிர்ச்சேதம் பற்றிய முழு விவரம் தெரியவரும் என்று அவர்கள் கூறினர்.
“பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகளை மூடியுள்ள மண்ணையும் பாறைகளையும் அகற்றும் பணியில் தேடி மீட்கும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியும்,” என்று ருக்கும் மாவட்ட காவல்துறை அதிகாரி நமராஜ் பட்டராய் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நேப்பாளத்தில் நிகழ்ந்த இரு நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு தற்போது மோசமான நிலநடுக்கம் நேப்பாளத்தைத் தாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நகரங்கள், நூற்றாண்டு பழமையான கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் ஜாஜர்கோட் மாவட்ட அதிகாரி ஹரிஷ் சந்திரா ஷர்மா ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
“பல வீடுகள் தரைமட்டமானது, இதர வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் திறந்தவெளியில் நடுங்கும் குளிரில் இரவுப்பொழுதைக் கழித்தனர்,” என்று திரு ஷர்மா மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், மீட்பு, துயர்துடைப்புப் பணிகளை முடுக்கிவிடும்படி நேப்பாளப் பிரதமர் புஷ்ப கமல் தாகால் உத்தரவிட்டுள்ளார்.
சனிக்கிழமை முற்பகுதியில் 16 உறுப்பினர் கொண்ட ராணுவ மருத்துவக் குழுவுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
உயிரிழப்பு, சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை அவர் தெரிவித்துக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளதாக ‘எக்ஸ்’ ஊடகப் பதிவில் பிரதமர் புஷ்பகமல் குறிப்பிட்டிருந்தார்.
நிலநடுக்கத்தால் ஆறு பில்லியன் டாலர் அளவுக்கு நேப்பாளத்துக்கு பொருளியல் இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.