கூலாய் குடிநுழைவுச் சோதனையில் நான்கு இந்தியர் உட்பட 69 பேர் கைது

கூலாய் குடிநுழைவுச் சோதனையில் நான்கு இந்தியர் உட்பட 69 பேர் கைது

2 mins read
b89e3ab5-ae93-4d18-b4a1-8201922284ca
மலேசியாவின் கூலாயில் நான்கு இந்தியர்கள் உட்பட 69 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கூலாய்: கூலாயில் உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் மொத்தம் 69 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 முதல் 45 வயதிற்கு உட்பட்ட இந்தச் சந்தேக நபர்களில் 22 பேர் பெண்கள், 47 பேர் ஆண்கள்.

இவர்களில் 32 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து நேப்பாளம் (13), இந்தோனீசியா (8), பங்ளாதேஷ் (7), பாகிஸ்தான் (5) மற்றும் இந்தியா (4) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிகளின் கீழ் குற்றங்களைச் செய்ததாக இவர்கள் சந்தேகிக்கப்படுவதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் முகமது ருஸ்டி முகமது டாரஸ் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கைகள், ஒரு மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) தொழிற்சாலை, கார் கழுவும் இடம், உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“வெளிநாட்டினரின் குடிநுழைவு அனுமதி, பயண ஆவணங்கள், அவர்களின் வேலைவாய்ப்பு நிலவரம், வேலை அனுமதிச் சீட்டுகள், முதலாளிகளின் விவரங்கள் போன்றவற்றை அதிகாரிகள் சரிபார்த்தனர்,” என்றார் அவர்.

ஒரு தொழிற்சாலையில் மனித வள அதிகாரிகளாகப் பணிபுரியும் இரு உள்நாட்டு ஆண்கள், விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“அனுமதிச் சீட்டின் நிபந்தனைகளை மீறி அல்லது நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினர் மீதும் அதேபோல் ஆவணங்களற்ற சட்டவிரோதக் குடியேறிகளுக்குப் புகலிடம் அளித்தவர்கள், வேலை வழங்கியவர்கள் அல்லது அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு ருஸ்டி எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருசோதனைகுடிநுழைவு