தைவானில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

2 mins read
5a7f199a-5659-46ee-ae3e-559004f9f01a
இலியான் நகரின் கடல் பகுதியில் சனிக்கிழமை (டிசம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. - படம்: அமெரிக்க புவியியல் அமைப்பு (USGS)

தைப்பே: தைவானின் வடகிழக்கில் உள்ள கடலோர நகரான இலியானிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

கடலில் 73 கிலோமீட்டர் ஆழம்கொண்ட அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் சேதங்கள் ஏற்படவில்லை என்று தைவானின் வானிலை நிர்வாகம் அறிவித்துள்ளது. சுனாமிக்கான எச்சரிக்கையும் அங்கு விடுக்கப்படவில்லை என்று தீயணைப்புப் படையினர் கூறியுள்ளனர்.

தலைநகர் தைப்பே உள்ளிட்ட தைவானின் வடக்கில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கட்டடங்களை உலுக்கின. அதனால் சிறிதளவு சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிர்வாகம் கணித்துள்ளது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு பெரிய அளவில் சேதங்கள் இல்லாவிட்டாலும் ஒருசில இடங்களில் எரிவாயுக் கசிவு, தண்ணீர்க் குழாய் சேதம், கட்டடங்களில் சிறிய பாதிப்பு போன்ற தனிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததாக தைப்பே நகராட்சி தெரிவித்துள்ளது.

இலியான் நகரில் சிறிது நேரம் 3,000 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது என்று தைவான் எரிசக்தி நிறுவனம் கூறியது. இலியானில் நான்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு 270 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று தைவான் ரயில்துறை அதிகாரிகள் கூறினர்.

தலைநகர் தைப்பேயில் ரயில்வண்டிகளின் வேகம் 20 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டது. ரயில் நிலையங்களிலும் தண்டவாளங்களிலும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது உறுதியானதும் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்பு அவ்வளவாக இல்லை என்று வானிலை நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நடக்கக்கூடிய அதிர்வுகள் 5.5 முதல் 6.0 ரிக்டர் அளவு சில நாட்களில் ஏற்படலாம் எனவும் அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்