போரால் 7.3 மில்லியன் மக்களின் உணவு நிதி பாதிப்பு: ஐநா உணவு அமைப்பு

போரால் 7.3 மில்லியன் மக்களின் உணவு நிதி பாதிப்பு: ஐநா உணவு அமைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

24 Nov 2026 - 5:42 pm

2 mins read

நியூயார்க்: மத்திய கிழக்கிலும் உக்ரேனில் நிலவும் போர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தால் தனது செலவினம் 727 மில்லியன் அமெரிக்க டாலர் வரை உயரக்கூடும் என்று உலக உணவு அமைப்பின் நிர்வாக இயக்குநர் லியூக் லிண்ட்பெர்க் கூறியுள்ளார்.

அது, 7.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உணவு நிதியைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய மனிதநேய அமைப்பிற்குத் தலைமை தாங்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட லிண்ட்பெர்க், கருங்கடல் வழியாக உக்ரேன், ரஷ்ய தானியங்களின் ஏற்றுமதிகளைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை, பாப் எல்-மண்டேப் நீரிணை, கருங்கடல் ஆகியவற்றின் வழியாக நடைபெறும் உணவு, வேளாண் மூலபொருள்களின் ஏற்றுமதி, எல் நினோ போன்ற பருவநிலை மாற்றங்களால் மேலும் மோசமடைந்துள்ளதாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வேளாண் துறை அதிகாரியான திரு லிண்ட்பெர்க், கிடங்குகளில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 10 மில்லியன் டன் உக்ரேனிய, ர‌ஷ்ய தானியங்கள், தேவைப்படும் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வதற்கான விரைவான தீர்வுகளைக் காண்பதில் கவனம் செலுத்தும்படி அரசாங்கத் தூதர்களிடம் வலியுறுத்தினார்.

உலக அளவில் ஏறக்குறைய 266 மில்லியன் மக்கள் கடுமையான பசியால் வாடுவதாகவும் சூடான், தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் முக்கிய உணவுக் களஞ்சியப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது கருங்கடல் வட்டாரம். அங்கு நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வுகாண்பது மிகவும் முக்கியம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது திரு லின்ட்பெர்க் கூறினார்.

அப்பகுதியின் தானியங்கள், சோமாலியா, ஏமன் போன்ற நாடுகளுக்கு மிக அவசியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐநா உதவியுடன் எட்டப்பட்ட ஒப்பந்தமான ‘கருங்கடல் தானியத் திட்டம்’ போன்ற மனிதநேய வழித்தடத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

அந்த ஒப்பந்தம் ஏறக்குறைய 33 மில்லியன் டன் உக்ரேனிய தானியங்களைப் பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்தது.

குறிப்புச் சொற்கள்