தோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதிகளை 7.5 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் மீட்டுக்கொண்டுள்ளனர்.
நிலநடுக்கத்தின் காரணமாகக் கிட்டத்தட்ட 30 பேர் காயமுற்றதாகவும் ஏறக்குறைய 90,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 8) இரவு 11.15 மணிக்கு உலுக்கியதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. நாட்டின் வட-கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் எழக்கூடும் என்றும் அது எச்சரித்திருந்தது.
ஹொக்கைடோ, ஆவ்மோரி, இவாட்டே வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில துறைமுகங்களில் 20 முதல் 70 சென்ட்டிமீட்டர் வரை அலைகள் எழுந்ததாக ஆய்வகம் கூறியது.
பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் ஆய்வகம், அனைத்து எச்சரிக்கைகளையும் மீட்டுக்கொண்டது. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
நிலநடுக்கம் ஆவ்மோரி வட்டாரத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் 54 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
ஜப்பானின் கிழக்கு, வட பகுதிகளில் சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தோஹோகு மின்சக்தி நிறுவனம், ஹொக்கைடோ மின்சக்தி நிறுவனம் ஆகியவற்றின் அணுமின் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆயினும் மின் விநியோகச் சேவை செவ்வாய்க்கிழமை காலை இயல்புநிலைக்குத் திரும்பியது.

