மாவ்மெரெ (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதிக்கு அருகே சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்பட்ட ரிக்டரில் 7.7 அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்ட மாநில ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்தன. நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை அகற்றப்பட்டது.
கட்டlம் இடிந்து விழுந்தபோது உறங்கிக்கொண்டிருந்த ஐவர் கொல்லப்பட்டதாக கிழக்கு நுசா தெங்காதரா மாநிலத்தின் ஆளுநர் இமேனுவெல் மெல்கியாடெஸ் லாக்கா லெனா, செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஃபுளோரஸ் தீவுக்கு அருகே சனிக்கிழமை காலை நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலைய (யுஎஸ்ஜிஎஸ்) அதிகாரிகளும் இந்தோனீசிய அதிகாரிகளும் முன்னதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேறினர்.
நிலநடுக்கம் ஃபுளோரஸ் தீவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 68 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கியதாக யுஎஸ்ஜிஸ் குறிப்பிட்டது.


