பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: 8,300க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவு

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: 8,300க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவு

2 mins read
37179d04-2ae8-4ac2-b48a-d41d0429d6ca
பிலிப்பீன்சில் ஜூன் 8ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சரிந்து கிடந்த கடைகள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மணிலா: பிலிப்பீன்சின் மிண்டனாவில் உள்ள சரங்கானி, மாசிம் கடலோரப் பகுதியில் கடந்த ஜூன் 8ஆம் தேதி நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இதுவரை மொத்தம் 8,381 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அரசு நில அதிர்வு ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தெரிவித்தனர்.

பிலிப்பீன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள புதிய தகவலில், பதிவான தொடர் நில அதிர்வுகளில் 2,040 அதிர்வுகளின் மையப்புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 90 அதிர்வுகளை மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொடர் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 1.2 முதல் 6.4 வரை பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட ஆரம்ப நாள்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தொடர் அதிர்வுகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகக் குறைந்து வருகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஜூன் 8, 9ஆம் தேதிக்கு இடைப்பட்ட முதல் கண்காணிப்புக் காலத்தில் நாளொன்றுக்கு 1,083 அதிர்வுகள் பதிவாகின.

ஆனால், கடந்த ஜூன் 18 மற்றும் 19ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை 516 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், சில நாள்களில் நில அதிர்வுகள் திடீரென அதிகரித்தன.

குறிப்பாக, ஜூன் 14, 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 884 தொடர் அதிர்வுகள் பதிவாகின.

இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள தொடர் நில அதிர்வுகள் இன்னும் சில வாரங்களுக்கு அல்லது ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
நிலநடுக்கம்பிலிப்பீன்ஸ்நில அதிர்வு