ஏழரை மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து எழுவர் காயம்

ஏழரை மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து எழுவர் காயம்

படம்: ரேஷ்மா ஃபதர்கான்

18 Aug 2023 - 5:34 pm

1 mins read

பெர்லின்: ஜெர்மனியின் ஆகப் பெரிய கருப்பொருள் பூங்காவில் நிகழ்ந்த விபத்தில் எழுவர் காயமுற்றனர்.

‘ஐரோப்பியப் பூங்கா’வில் கழைக்கூத்தாடிகள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது நடமாடும் குளத்தில் விரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த குதிமேடை உடைந்து விழுந்ததாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவித்தன.

இதனால் தடுமாறிய கழைக்கூத்தாடிகள் கிட்டத்தட்ட ஏழரை மீட்டர் உயரத்திலிருந்து நீரில் விழுந்தனர்.

இதனையடுத்து, அந்த நடமாடும் குளத்திலிருந்த நீர் அருகிலிருந்த நீர்ச்சவாரி ஏரியில் பாய்ந்தது.

இவ்விபத்து கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது.

இதில் கழைக்கூத்தாடிகள் ஐவரும் பார்வையாளர்கள் இருவரும் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. கழைக்கூத்தாடிகள் மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆயினும், அப்பூங்கா மறுநாள் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திறக்கப்பட்டு, அதன் அனைத்துச் சவாரிகளும் செயல்பாட்டிற்குத் திரும்பியதாக அதன் பேச்சாளர் கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Watch on YouTube

கடந்த 2022ஆம் ஆண்டு இந்த ஐரோப்பியப் பூங்காவானது ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டோரை ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்