ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே ஏற்பட்ட வெடிப்பில் ஏழு மாணவர்கள் மரணம்

ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே ஏற்பட்ட வெடிப்பில் ஏழு மாணவர்கள் மரணம்

படம்: ஈபிஏ

28 Nov 2026 - 7:01 pm

1 mins read

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியான குனார் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே சனிக்கிழமை (நவம்பர் 28) வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், 99 பேர்வரை இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். தலிபான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சனிக்கிழமை வெளியிட்ட தகவலில் இதனைத் தெரிவித்தார்.

பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கிடங்கு ஒன்றிலிருந்து இந்த வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருள்கள் அந்தக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குனார் மாநிலத்தில் பல சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அசதாபாத் மாவட்டத்தின் அந்தர்சிர் பகுதியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்களது விசாரணை முழுமையாக முடிந்த பிறகு, இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் நகரில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதில் 42 சிறார் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்