தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிகாகோவில் துப்பாக்கிச்சூடு; சிறுமி உயிரிழப்பு, எழுவர் காயம்

1 mins read
2b2addf3-9e7e-48fb-9ab1-6c33fe84e9e8
துப்பாக்கிச்சூடு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சிகாகோ காவல்துறையினர். - படம்: சிகாகோ காவல்துறை

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் மரணமடைந்தார்; இரு குழந்தைகள் உட்பட எழுவர் காயமடைந்தனர்.

குடும்ப ஒன்றுகூடலுக்காக வெளியில் நின்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக சிகாகோ காவல்துறை தெரிவித்தது.

அப்போது, தலையில் குண்டுபாய்ந்து அந்த ஏழு வயதுச் சிறுமி மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு வயது மற்றும் ஏழு வயது சிறுவர் இருவர்மீது பலமுறை சுடப்பட்டதாகவும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிகாகோ காவல்துறைத் துணைத் தலைவர் டான் ஜெரோம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 19 முதல் 40 வயதிற்குட்பட்ட மேலும் அறுவர் காயமுற்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்நிலை குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் காவல்துறை கூறியது.

துப்பாக்கிச்சூட்டிற்குக் கும்பல் சார்ந்த வன்முறை காரணமாக இருக்கலாம் எனத் தெரிவதாகத் திரு ஜெரோம் சொன்னார்.

“காரணம் எதுவாக இருந்தாலும் மூன்று அப்பாவிக் குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுவிட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிக்காரர்கள் இருவரைச் சிலர் கண்டதாகவும் திரு ஜெரோம் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்