பங்ளாதேஷ் சிறைகளிலிருந்து தப்பிய 700 கைதிகள் தலைமறைவு

1 mins read
492ea388-e65f-4ca7-a5ea-28a828668006
மாணவர் ஆர்ப்பாட்டங்களின்போது பங்ளாதேஷின் தந்தையாகக் கருதப்படும் ஷேக் முஜீபுர் ரகுமானின் படம் சிதைக்கப்பட்டு, அதில் அவரது மகளான ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படம்பிடிக்கும் மக்கள். - படம்: இந்திய ஊடகம்

டாக்கா: பங்ளாதேஷில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது சிறைகளிலிருந்து தப்பிய 700 கைதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், பங்ளாதேஷின் பிரதமாராக இருந்த ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் நாடளாவிய போராட்டத்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, ஷேக் ஹசீனா நாடு தப்பி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தார்.

அந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 19ம் தேதி தலைநகர் டாக்காவின் கிழக்குப் பகுதியில் நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கி அதில் தீ வைத்தனர்.

அந்த நேரத்தில் அந்தச் சிறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்தனர். அதை அடுத்து, அந்நாட்டின் நான்கு முக்கியச் சிறைச்சாலைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றித் தாக்கினர்.

அந்தத் தாக்குதல்களில் அந்தச் சிறைகளில் இருந்த ஏறக்குறைய 2,200 கைதிகள் தப்பித்தனர்.

“சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகளில் 1,500 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 700 கைதிகள் தலைமறைவாகியுள்ளனர்,” என்று சிறைத்துறைத் தலைமை அதிகாரி சையது முஹம்மது மொதாஹர் ஹூசைன் கூறினார்.

“அதோடு, தலைமறைவாகியுள்ள கைதிகளில், 70க்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாதிகள் மற்றும் மரண தண்டனைக் கைதிகள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கைப்பற்றப்பட்டு உடைக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பங்ளாதேஷின் காசிம்பூரில் உள்ள உயர்பாதுகாப்பு சிறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்