700 சவர்க்காரக் கட்டிகளின் துணையுடன் நகர்த்தப்பட்ட 220 டன் கட்டடம்

700 சவர்க்காரக் கட்டிகளின் துணையுடன் நகர்த்தப்பட்ட 220 டன் கட்டடம்

2 mins read
61823772-568e-4f08-86f2-1c1a325d9bfb
700 சவர்க்காரக் கட்டிகளைப் பயன்படுத்தி, ‘எல்ம்வுட்’ கட்டடம் நகர்த்தப்பட்டது. - படம்: எஸ். ரஷ்டன் கன்ஸ்டரக்‌ஷன்/ஃபேஸ்புக்

கனடா: கனடாவில் 220 டன் எடைகொண்ட பழைமைவாய்ந்த கட்டடம் ஒன்று, 700 சவர்க்காரக் கட்டிகளைக் கொண்டு நகர்த்தப்பட்டது.

நோவா ஸ்காட்டியா மாநிலம், ஹாலிஃபேக்ஸ் நகரில் அமைந்துள்ள ‘எல்ம்வுட்’ எனும் அந்தக் கட்டடத்தை, எஸ். ரஷ்டன் என்ற கட்டுமான நிறுவனம் டிசம்பர் தொடக்கத்தில் நகர்த்தியது.

பல வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தப்பணிகளுக்குப் பிறகு, கட்டடத்தை நகர்த்தும் பணி சுமுகமாக நடந்ததாக நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. அதனைக் காட்டும் ஒரு காணொளியையும் அது பதிவேற்றம் செய்தது.

அந்தக் கட்டடம் 1826ஆம் ஆண்டில் குடியிருப்புக்காகக் கட்டப்பட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு அது ஹோட்டலாகச் செயல்பட்டது. பின்னர் அது மீண்டும் குடியிருப்புக் கட்டடமாக மாறியது.

‘எல்ம்வுட்’ கட்டடத்தை 2018ஆம் ஆண்டில் இடிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், ‘கேலக்சி புராப்பர்ட்டிஸ்’ எனும் சொத்துச் சந்தை நிறுவனம், அதே ஆண்டில் அந்தக் கட்டடத்தை வாங்கியதால், அதனை இடிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

‘கேலக்சி புராப்பர்ட்டிஸ்’ நிறுவனம் அக்கட்டடத்தைச் சாலையோரத்திற்கு 300 மீட்டர் அருகே கொண்டுசென்று அதனைப் புதிய இடத்தில் நிறுத்தி, 9 மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றுடன் இணைக்கத் திட்டமிட்டது.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அக்கட்டடத்தை நகர்த்துவதில் இருந்த சவால்களை உணர்ந்த எஸ். ரஷ்டனின் உரிமையாளர் ஷெல்டன் ரஷ்டன், அதனை வெற்றிகரமாகச் செய்வதற்கு ‘ஐவரி’ வகை சவர்க்காரக் கட்டிகளைப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

அவருடைய துணைவியார் 15 கடைகளுக்குச் சென்று 700 ‘ஐவரி’ வகை சவர்க்காரக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சவர்க்காரக் கட்டிகள் கட்டடத்தின்கீழ் இருந்த பல எஃகுத் தூண்களுக்கு மேல் வைக்கப்பட்டன. கட்டடத்தின் எடை அந்தச் சவர்க்காரக் கட்டிகளை நசுக்கியதால், தூண்கள் வழுவழுவென இருந்தன. இரண்டு அகழ்பொறிகள், ஓர் இழுவை வண்டியின் உதவியோடு கட்டடம் நகர்த்தப்பட்டதாக திரு ரஷ்டன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்