ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கலிமந்தான் மற்றும் சுமத்ரா பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் நிலப்பரப்புகளில் தொடரும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் இயற்கைச் சீற்றங்களை உடனடியாகக் கையாள இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உத்தரவிட்டதை அடுத்து, சட்டவிரோதமாக நிலத்துக்குத் தீவைத்த விவகாரம் தொடர்பாக 72 பேரைச் சந்தேக நபர்களாகக் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இந்தோனீசியத் தேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) வெளியிட்ட அறிக்கையில், கலிமந்தானில் உள்ள ஐந்து மாநிலங்கள் மற்றும் சுமத்ராவில் உள்ள நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்ட அதிக வெப்பப் புள்ளிகள் தற்செயலானவை அல்ல என்றும் அவை இந்தச் சந்தேக நபர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரியாவ் மாநிலத்தில் சந்தேக நபர்களில் ஆக அதிகமாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1,200க்கும் மேற்பட்ட வெப்பப் புள்ளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு சுமத்ராவில் 17 பேரும் மத்திய கலிமந்தானில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களின் அடையாளங்களை காவல் துறை இன்னும் வெளியிடவில்லை.
சம்பவ இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தீப்பெட்டிகள், தீப்பற்றும் எரிபொருள்கள் போன்றவை, நிலத்தைச் சீரமைக்கும் செலவைக் குறைப்பதற்காகவே சந்தேக நபர்கள் திட்டமிட்டுத் தீவைத்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பழக்கவழக்கமே இந்தோனீசியாவின் வெப்ப காலத்தில் ஆண்டுதோறும் தொடரும் காட்டுத் தீ மற்றும் அடர்ந்த புகைமூட்டப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக அமைவதாகக் கூறப்படுகிறது.


