ஈப்போ: ஈப்போ நகரில் இருக்கும் விளம்பரப்பலகை ஒன்றின் மீது அபாயகரமான நிலையில் ஏறி நின்று 'செல்ஃபி' புகைப்படங்கள், காணொளிகள் எடுத்துக்கொண் டது இணையத்தில் பரலாகப் பரவி வருகிறது. விளம்பரப்பலகையின் மீது ஏறிய ஒருவர் அவ்வாறு ஏறுவதற்கு அனுமதி அளித்த ஈப்போ நகர மன்றத்துக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டகிராமில் செய்தி ஒன்றைப் பதிவேற்றி இருந்தார். ஆனால் அவ்வாறு அனுமதி ஏதும் அளிக்கவில்லை என நகரமன்றம் தெரிவித்துள்ளது. "இணையத்தில் வலம் வரும் புகைப்படங்களைப் பார்த்தால் உயி ரைப் பணயம் வைத்து இளையர்கள் விளம்பரப்பலகையின் மீது ஏறி இருக்கின்றனர். பராமரிப்புப் பணிகளுக்காக ஒப்பந்ததாரருக்கு மட்டுமே விளம்பரப் பலகையின்மீது ஏறுவதற்கு நாங்கள் அனுமதி அளிப்போம். அவர்களும் பாது காப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்," என்று ஈப்போ நகர மேயர் ஸம்ரி மான் குறிப்பிட்டார்.
சென்ற வெள்ளிக்கிழமை இன்ஸ்டகிராமில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் பல இளையர்கள் குனுங் லாங் பகுதியில் கோல கங்சார் ரோட்டில் இருக்கும் 'ஈப்போ' விளம்பரப்பலகையின் மீது ஏறி நிற்பதைக் காட்டியது. அந்த விளம்பரப் பலகையின் மேல் பகுதியில் நடந்து சென்று புகைப்படம் எடுப்பதைப் பதிவேற்றப்பட்ட காணொளி புலப்படுத்தியது. இச்செயலில் ஈடுபட்ட யாரும் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்திருக்கவில்லை. படங்கள்: யுடியூப்

