மலேசியாவில் வெள்ளம்: 23,000 பேர் பாதிப்பு

1 mins read
3c7016f3-865b-403d-82f6-42ac752f338f
-

கோலாலம்பூர்: மலேசியாவின் இரண்டு வடகிழக்கு மாநிலங் களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சுமார் 23,000 பொது மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். புதிய நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டுள்ளதாக துயர் துடைப்பு அதிகாரிகள் தெரிவித் தனர். பருவமழை காரணமாக மலேசியாவின் கிழக்குக் கரையோர மாநிலங்களில் வெள்ளமும் மீட்புப் பணிகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கிளந்தான் மாநிலத்திலிருந்து 10,038 பேரையும் திரெங்கானு மாநிலத் திலிருந்து 12,910 பேரையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாகப் பெய்த கனத்த மழையால் 101 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பல சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கிளந்தான் மாநிலத்தில் சில நிலையங்களுக்கு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ளத்திற்கு இதுவரை எவரும் பலியாகவில்லை. நேற்று முன்தினம் சுமார் 4000 ஆக இருந்த மீட்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வெகுவாக அதிகரித்து 12000 ஆனது என திரெங்கானு குடிமைத் தற்காப்புப் பிரிவின் தலைவர் திரு சே ஆடம் அப்துல் ரஹ்மான் கூறினார்.

முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள வெள்ளநீரைக் கடந்து செல்லும் மக்கள். கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி