ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்தில் 79 பேர் உயிரிழப்பு

1 mins read
f3c4b966-cc7b-4c47-87e4-45308f58bb0d
விபத்தில் சிக்கியபின் தீப்பிடித்து எரிந்து, முற்றிலும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கும் பேருந்து. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

காபூல்: ஆப்கானிஸ்தானில் அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 79 பேர் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விபத்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பின்னேரத்தில் நேர்ந்தது. ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானியர்களை அப்பேருந்து சுமந்துசென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹெராத் - காபூல் நெடுஞ்சாலையில் நேர்ந்த அவ்விபத்தில் அப்பேருந்துடன் ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு சரக்குந்தும் சம்பந்தப்பட்டிருந்ததாக ஹெராத் மாநில தகவல்துறைத் தலைவர் அகமதுல்லா முட்டாக்கி தெரிவித்தார்.

விபத்தைத் தொடர்ந்து அப்பேருந்து தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டது. மாண்டவர்களில் 19 குழந்தைகளும் அடங்குவர்.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததையும் ஒரு தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததையும் விபத்து குறித்த காணொளி காட்டியது. முற்றிலும் தீக்கிரையான அப்பேருந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்ததைப் படங்கள் காட்டின.

பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக உள்கட்டமைப்பு மோசமானதாலும் ஓட்டுநர்கள் விதிகளைக் காற்றில் பறக்கவிடுவதாலும் ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துகள் வழக்கமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஈரான், துர்க்மெனிஸ்தான் நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஹெராத் மாநிலத்தில் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்