ர‌‌ஷ்யாவுக்கு அப்பால் 8.7 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்த ஜப்பான்

2 mins read
ac894ee4-1ee4-4622-8dad-f067485e3f01
ர‌‌ஷ்யாவில் கம்சாட்கா கிராய் வட்டாரத்தின் பெட்ரோபாவ்லோஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் சேதமடைந்த பாலர்பள்ளி (ஜூலை 30). - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ர‌‌ஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அப்பால் 8.7 ரிக்டர் அளவுகொண்ட வலுவான நிலநடுக்கம் புதன்கிழமை (ஜூலை 30) ஏற்பட்டுள்ளது. ர‌‌‌ஷ்யாவின் கிழக்கு எல்லைப் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் நான்கு மீட்டர் உயரத்துக்கு எழுந்தன. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சில இடங்களில் சேதம் உண்டானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இன்றைய நிலநடுக்கம் மிகவும் கடுமையானது. கடந்த பல ஆண்டுகளில் ஆக வலுவான அதிர்வுகளை அது ஏற்படுத்தியுள்ளது,” என்று கம்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சொலோடோவ் தெரிவித்தார். டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளியில் பேசிய அவர், பாலர்பள்ளி ஒன்று சேதமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

சுனாமி அலைகளை ர‌‌ஷ்யாவின் அவசரக்கால நிலைமைகளுக்கான வட்டார அமைச்சர் செர்கி லெபெடேவ் உறுதிப்படுத்தினார்.

“அனைவரும் கடல் கொந்தளிக்கும் பகுதியிலிருந்து விலகியிருக்க வேண்டும்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்ட காணொளியில் அவர் கேட்டுக்கொண்டார்.

நிலநடுக்கம் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலத்தியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. அவாச்சா விரிகுடாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்லோஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் அது மையம் கொண்டிருந்ததாகவும் அமைப்பு குறிப்பிட்டது.

1952ஆம் ஆண்டுக்குப் பிறகு கம்சாட்கா தீபகற்பத்தை உலுக்கிய ஆக வலுவான நிலநடுக்கம் அது.

ஜப்பானிய வானிலை ஆய்வு அமைப்பு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடக்கு, கிழக்குக் கரையோரங்களில் சுனாமி அலைகள் வரக்கூடும் என்று அது முன்னுரைத்தது. ஒசாகாவுக்குத் தெற்கே உள்ள வக்காயாமா நகரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று கூறப்பட்டது. சில பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக என்எச்கே (NHK) ஊடகம் தெரிவித்தது.

வடக்கே இருக்கும் ஹொக்காய்டோ தீவை சுனாமி அலைகள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. அங்கிருந்து தொழிற்சாலை ஊழியர்களும் குடியிருப்பாளர்களும் பெருங்கடலுக்கு மேற்பகுதியில் இருந்த குன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்