டாக்கா: பங்ளாதேஷில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொடர்புடைய 760 பில்லியன் டாகா (Taka) (S$8 பில்லியன்) மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூலை 16) தெரிவித்துள்ளனர்.
திருவாட்டி ஹசீனா, அவரது குடும்பத்தினர், 10 வர்த்தகக் குழுமங்கள் ஆகிய தரப்புகளுடன் தொடர்புடையவை அவை.
பங்ளாதேஷில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து பதவியிழந்த திருவாட்டி ஹசீனா, அண்டை நாடான இந்தியாவுக்குத் தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற திரு முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
திருவாட்டி ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியின்போது நடந்த ஊழல்கள், முறைகேடுகள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் குறித்துப் புதிய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவாட்டி ஹசீனா, அவரது குடும்பத்தினர், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட தொழிலதிபர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள், சொகுசு வீடுகள், நிலங்கள், நிறுவனப் பங்குகள் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பங்ளாதேஷிலும் வெளிநாடுகளிலும் உள்ள சொத்துகள் அவற்றில் அடங்கும்.
பங்ளாதேஷ் வரலாற்றிலேயே ஆக அதிகமான தொகையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தச் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை, நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் ஊழலுக்கு எதிராகப் போராடவும் தங்களுக்கு உள்ள உறுதியைக் காட்டுவதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

