விபத்து: காரில் இருந்த எண்மர் உயிரிழப்பு

விபத்து: காரில் இருந்த எண்மர் உயிரிழப்பு

1 mins read
f5fb65fa-14e6-478c-aa06-b3e89f66a68b
ஜாலான் சரிக்கெய்-சிபுவில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டன. - படம்: மலேசிய ஊடகம்

சிபு: மலேசியாவின் சரவாக் மாநிலம், ஜாலான் சரிக்கெய்-சிபுவில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், காரில் இருந்த எண்மர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் எழுவர் இந்தோனீசியர்கள் என்றும் ஒருவர் உள்ளூர்வாசி என்றும் சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறை வியாழக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்தது.

மற்றொரு வாகனத்தில் இருந்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

பிற்பகல் 3.40 மணியளவில் தனக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சரிக்கெய் தீயணைப்பு நிலையம் கூறியது.

“இருபது நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், நசுங்கிய காரில் எண்மர் இருந்ததைக் கண்டறிந்தனர்.

இருவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் எஞ்சிய அறுவர் காரில் சிக்கிக்கொண்டதாகவும் சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த எண்மரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையின் கண்காணிப்புச் சோதனையிலிருந்து தப்ப முற்பட்டபோது, அந்த எண்மர் இருந்த கார் விபத்துக்குள்ளானதாக சரிக்கெய் காவல்துறைத் தற்காலிகத் தலைவர் அஸ்வாண்டி அனிஸ் தெரிவித்ததை தி ஸ்டார் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.

குறிப்புச் சொற்கள்
சரவாக்சாலை விபத்துஉயிரிழப்பு