தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான்: மாணவர்களை சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிய பெண் கைது

1 mins read
66dcc276-8dc0-47ee-bbe8-14e32a9cd3c6
சம்பவம் நிகழ் ஹோசெய் பல்கலைக்கழகத்தின் வளாகம். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நிகழ்ந்த சுத்தியல் தாக்குதலில் எட்டு மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் குணமடைந்து வருவதாகவும் அவர்களில் யாருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கும் தேவை ஏற்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சுத்தியலைக் கொண்டு பெண் ஒருவர் தோக்கியோவின் தாமா பகுதியில் உள்ள ஹோசெய் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) பிற்பகல் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபரான 22 வயது மாணவி தான் தென்கொரியாவைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். சம்பவ இடத்திலேயே அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தாக்குதலுக்குப் பிறகு சிலரின் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததாகப் பல தகவல்கள் தெரிவித்தன. பகடிவதைக்கு ஆளானதால் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையை மேற்கோள்காட்டி ஜப்பானின் என்ஹெச்கே ஊடகம் செய்தி வெளியிட்டது. தாக்குதல்காரர், திடீரென வகுப்பில் சுத்தியலைச் சுழற்றித் தாக்க ஆரம்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட மாணவர் ஒருவர் டிவி அசாஹி தொலைக்காட்சியிடம் கூறினார்.

தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் எட்டுப் பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை ஏற்படவில்லை என்றும் வெள்ளிக்கிழமை இரவு ஹோசெய் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்