ஹிரோஷிமா, ஜப்பான்: சரியாக 80 ஆண்டுகளுக்குமுன் அணுகுண்டு தகர்த்த ஹிரோஷிமாவில் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்திய நகர மேயர் கஸுமி மட்ஸுய் ஒருசில நாடுகளில் இன்றும் காணப்படும் அணுகுண்டுகள் குறித்து உலகத் தலைவர்களை எச்சரித்தார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ‘லிட்டில் பாய்’ என்றழைக்கப்படும் யுரேனிய அணுகுண்டை அமெரிக்கா ஹிரோஷிமாமீது போட்டதில் கிட்டத்தட்ட 78,000 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா ராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும் முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது. அதன்மீது போடப்பட்ட அணுகுண்டு 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் வெளியிட்டதில் 1945ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
மூன்று நாள்கள் கழித்து புளூட்டோனியம் அணுகுண்டு நாகசாகிமீது போடப்பட்டது. நிலத்திலிருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் வெடித்த அணுகுண்டு, கிட்டத்தட்ட 200,000 பேர் இருந்த நகரத்தில் ஏறக்குறைய 27,000 பேரைக் கொன்றது.
அந்தக் கோர சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் அணுவாயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 120க்கும் அதிகமான நாடுகளிலிருந்தும் வட்டாரங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சரியாக 8.15 மணிக்கு அணுகுண்டு விழுந்ததை நினைவுகூர மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதையடுத்து பேசிய திரு கஸுமி, ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
“உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் நாட்டைப் பாதுகாக்க அணுவாயுதங்களை வைத்திருக்கும் நடைமுறை தவிர்க்க முடியாத ஒன்று என நம்புகின்றனர்,” என்ற அவர், உலக அணுவாயுதங்களில் 90 விழுக்காட்டை அமெரிக்காவும் ரஷ்யாவும் வைத்திருக்கின்றன என்றார்.
“உலக தலைவர்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்னவென்றால் தயவுசெய்து ஹிரோஷிமாவுக்கு வந்து அணுகுண்டுகளால் ஏற்படக்கூடிய நிலையைப் பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்,” என்று திரு கஸுமி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கதிர்வீச்சால் ஏற்பட்ட நோய்கள், காயங்கள் போன்றவற்றால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலவரப்படி ஹிரோஷிமாவில் 344,306 பேரும் நாகசாக்கியில் 198,786 பேரும் மாண்டதாக ஜப்பான் அடையாளம் கண்டுள்ளது.


