அமெரிக்காவில் 8,000 விமானச் சேவைகள் தாமதம்

1 mins read
5e6e1ad7-26e3-48c9-9b66-12cfe28b9317
அமெரிக்க அரசாங்கத் துறை முடங்கியிருப்பதால் விமானச் சேவைகள் பாதிப்பு. - கோப்புப் படம்: ராய்ட்டர்ட்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) 8,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தாமதமாயின.

அந்நாட்டில் விமானப் போக்குவரத்து சமிக்ஞை கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலர் தொடர்ந்து பணியில் இல்லாத நிலையில் இப்பிரச்சினை உருவாகியுள்ளது. அந்நாட்டின் அரசாங்கத் துறை 26 நாள்களாக முடங்கியிருக்கிறது.

சனிக்கிழமையன்று (அக்டோபர் 25) 22 இடங்களில் போதுமான மத்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இல்லாதிருந்ததாக அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் ‌ஷோன் டஃபி தெரிவித்தார். வரும் நாள்களில் மேலும் பல விமானச் சேவைகள் தாமதமடையும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

உள்ளுர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி நிலவரப்படி அமெரிக்காவில் 8,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தாமதமடைந்தது விமானச் சேவைக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபிளைட்அவேர்’ மூலம் தெரிய வந்தது. இது, சனிக்கிழமை பதிவான சுமார் 5,300ஐ விட அதிகமாகும்.

இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமெரிக்க அரசாங்கத் துறை முடங்கிப்போயிருக்கிறது. அப்போதிருந்தே விமானச் சேவைகள் தாமதமடைவது வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.

அரசாங்கத் துறை முடங்கிப்போயிருக்கும் நிலையிலும் கிட்டத்தட்ட 13,000 ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் 50,000 போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளும் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்