கம்போடியாவில் மோசடி தொடர்பில் கைதான 81 வெளிநாட்டினர்

கம்போடியாவில் மோசடி தொடர்பில் கைதான 81 வெளிநாட்டினர்

2 mins read
e89b6680-d832-43ff-8696-283c9448a81b
நோம்பென்னில் கைதுசெய்யப்பட்டோரில் 72 பேர் சீனாவையும் 9 பேர் மியன்மாரையும் சேர்ந்தவர்கள். - படம்: இணையக் குற்றத் தடுப்பு ஆணையம்

நோம்பென்: கம்போடியாவில் மோசடிக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய சோதனையில் 81 வெளிநாட்டினரைத் தலைநகர் நோம்பென்னில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டோரில் 72 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில்நுட்பக் குற்றங்களைக் களைவதற்கான ஆணையம் தெரிவித்தது.

கைதானோரிடமிருந்து 480 கைப்பேசிகளுடன் கணினிகளும் 12 சவுரி முடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகளின் அறிக்கைப்படி, சந்தேக நபர்கள் தொழில்நுட்ப ரீதியான மோசடிகளில், குறிப்பாக, காதல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். மோசடிக் கும்பலின் தலைவர்கள் யார் என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட இணைய மோசடிக் கட்டமைப்புகளை அதிகாரிகள் வெற்றிகரமாக முடக்கியிருப்பதாகக் கூறிய ஆணையம், அவற்றுள் பல கும்பல்கள் சூதாட்டக் கூடத்திலும் செயல்பட்டதாகக் குறிப்பிட்டது.

ஆக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 26ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 223,610 வெளிநாட்டினர் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்குத் திரும்பினர் என்று ஆணையம் கூறியது.

அவர்கள் சீனா, வியட்னாம், இந்தோனீசியா, இந்தியா, பங்ளாதே‌ஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

“மோசடிக் கும்பலின் தலைவர்களில் சிலர் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களில் சிலர் கம்போடியாவைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் மோசடி நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர். வேறு சிலர் கம்போடியாவில் ஒளிந்துகொண்டு சிறு குழுக்களாகச் செயல்படுகின்றனர்,” என்று தொழில்நுட்பக் குற்றங்களைக் களைவதற்கான ஆணையம் சுட்டியது.

தலைநகர் நோம்பென்னிலும் 24 மாநிலங்களிலும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் சட்டவிரோத நடவடிக்கை நிகழ்வதற்கு ஏற்ற இடங்கள் அகற்றப்படும் என்றும் ஆணையம் சூளுரைத்தது.

எல்லை தாண்டிய குற்றங்கள் வேரோடு களையப்படும் என்று ஆணையத் தலைவரும் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சருமான திரு சாய் சினரித் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கம்போடியாமோசடிகைதுவெளிநாட்டவர்