85 நிமிடங்களில் 10 கி.மீ. தூரம் ஓடிய 85 வயது மூதாட்டி

2 mins read

இந்த மூதாட்டிக்கு வயது ஒரு எண் மட்டுமே. தமது 85வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பிரிட்டனில் 10 கிலோமீட்டர் அறக்கொடை ஓட்டப்பந்தயத்தை 85 நிமிடங்களிலேயே முடித்துவிட்டார்.

இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 80 வயதைத் தாண்டிய ஒரேயொருவர் திருவாட்டி பார்பரா தாக்ரே மட்டுமே.

மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த ஓட்டத்தில் இவர் ஏற்கெனவே பதிவுசெய்த நேரத்தை முறியடித்தார். மான்செஸ்டரில் உள்ள செயின்ட் ஆன்ஸ் அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்துக்காக நிதி திரட்ட திருவாட்டி தாக்ரே உதவினார்.

ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளரான இவர், உடலுறுதியைக் கட்டிக்காக்க வாரத்திற்கு இருமுறை 10 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறார்.

"கடந்த சில ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த நிதி திரட்டு முயற்சியின் மூலம் இதுவரை கிட்டத்தட்ட £2,000 (S$2,885) தொகையைத் திரட்டியுள்ளேன்," என்று மான்செஸ்டர் ஈவனிங் நியூசிடம் திருவாட்டி தாக்ரே கூறினார்.

"இந்தப் போட்டி எப்போதுமே என் நினைவில் இருக்கும். நாடு முழுவதுமிருந்து என்னுடன் சேர்ந்து ஓட வந்த என் குடும்பத்தாரும் என்னோடு நிறைவுக்கோட்டைக் கடந்தனர்!" என்று திருவாட்டி தாக்ரே பெருமிதத்துடன் கூறினார்.

77 வயதில் ஓடத் தொடங்கிய இவர், இந்தப் போட்டியில் தம் குடும்ப உறுப்பினர்கள் 11 பேருடன் சேர்ந்து ஓடினார். நிறைவுக்கோட்டைக் கடந்தபோது பதாகைகளும் பிறந்தநாள் கேக்கும் இவருக்காக காத்திருந்தன.

காலஞ்சென்ற சகோதரிக்குப் பராமரிப்பு வழங்கிய அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்துக்கு உதவ திருவாட்டி தாக்ரே கடப்பாடு கொண்டுள்ளார்.

அண்மையில் அடிடாஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரம் ஒன்றுக்கு தேர்வுசெய்யப்பட்ட முகங்களில் திருவாட்டி தாக்ரேயும் ஒருவர். லிவர்பூல் காற்பந்து வீரர் முகம்மது சாலாவும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளார்.

Watch on YouTube