இணைய சூதாட்ட சோதனைகளில் 85பேர் கைது: மலேசியக் காவல்துறை

2 mins read
abb8c8e4-9823-49d1-862a-6da8828b7b11
சோதனை செய்யப்பட்ட 21 இடங்களில் 20 இடங்கள் இணைய சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டன என்று புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் எம். குமார் கூறினார். - படம்: மலாய்மெயில்

கோலாலம்பூர்: இணையச் சூதாட்டத்துக்கு எதிராக நடந்த நாடுதழுவிய சோதனைகளில் 85பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் எம். குமார் புதன்கிழமை (டிசம்பர் 24) தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 20) தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) வரை சோதனை செய்யப்பட்ட 21 இடங்களில் 20 இடங்கள் இணையச் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தொலைபேசி அழைப்பு நிலையங்களாக இயங்கின எனவும் அவர் விளக்கினார்.

‘டாடு மேகா’ என்ற பெயரில் நடந்த சோதனையில் கணினிகள், கைப்பேசிகள் என பல உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணையில் இணைய சூதாட்டக் கும்பல் உள்ளூர் மக்களையும் பிலிப்பீன்ஸ், சீனா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தோரையும் குறிவைத்து செயல்பட்டுள்ளன என்றார் திரு குமார். உள்ளூர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கென ஒரு இடம் இருந்துள்ளது. அது முதலீடு மோசடி மையமாக தொலைபேசி அழைப்புகள் செய்ய பயன்பட்டுள்ளது என்பதை அவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

கைதாகியுள்ள 85 பேரில், 47 உள்ளூர் நபர்களும் 38 வெளிநாட்டினரும் அடங்குவர். இணைய சூதாட்ட செயல்பாடுகளில் அவர்கள் வாடிக்கையாளர் அதிகாரிகளாகவும் சேவையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

கைதானோர்கள் பொது சூதாட்ட சட்டப்படியும் (1953) குடிநுழைவு சட்டப்படியும் (1959/63) தண்டனைச் சட்டம் பிரிவு 420படியும் வட்டாரக் காவல்துறை தலைமையகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் தொடக்கம் முதல் இதுவரை சூதாட்டங்களுக்கு உதவும் தொலைபேசி அழைப்பு மையங்களாக செயல்பட்ட 117 இடங்களில் நடந்த சோதனைகளில், 731 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“சட்டத்துக்கு எதிரான சூதாட்ட நடவடிக்கைகளை ஒழிக்க நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும். பொதுமக்கள் தகவல்கள் அளித்து காவல்துறைக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம், ” என்று திரு குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்