இபோலா தொற்றால் 88 பேர் மரணம்; அனைத்துலகச் சுகாதார அவசரநிலை அறிவிப்பு

இபோலா தொற்றால் 88 பேர் மரணம்; அனைத்துலகச் சுகாதார அவசரநிலை அறிவிப்பு

1 mins read
718d8def-1718-4c1d-8e0c-0a058c9a99e4
காங்கோ ஜனநாயகக் குடியரசின் புனியா நகரில் இபோலா தொற்றிய ஒருவர் அவசர மருத்துவ வாகனம் மூலமாகக் கொண்டுசெல்லப்படுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா நோய்த்தொற்றால் 80க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

இதனையடுத்து, அனைத்துலகச் சுகாதார நிறுவனமானது ஞாயிற்றுக்கிழமை (மே 17) அனைத்துலகச் சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

வேகமாகப் பரவக்கூடிய, ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடிய இபோலா தொற்றால் இதுவரை 88 பேர் மாண்டுவிட்டதாகவும் மேலும் 336 பேரை அது தொற்றியுள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சனிக்கிழமை தெரிவித்தது.

இப்போது பரவிவரும் ‘புந்திபுகியோ’ இபோலா கிருமித்திரிபிற்கு தடுப்பு மருந்தோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்று காங்கோ சுகாதார அமைச்சர் சேமுவல் ரோஜர் கம்பா தெரிவித்தார்.

அந்தக் கிருமி தொற்றுவோர் உயிரிழக்க 50 விழுக்காடுவரை வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இபோலா தொற்றியோரிடம் காய்ச்சல், ரத்தப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம்.

உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளை ஒட்டிய காங்கோவின் வடகிழக்கு மாநிலமான இத்தூரியில் இபோலா பரவி வருவதைச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அம்மாநிலத் தலைநகர் புனியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தாதி ஒருவரே இத்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஆவார்.

காங்கோவில் இபோலா பரவி வருவது இது 17வது முறை எனக் கூறப்பட்டது.

இதனிடையே, அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அண்டை நாடான உகாண்டாவில் இபோலாவால் இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இபோலா விரைவாகப் பரவி வருவதையடுத்து, ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு, காங்கோவில் தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்