ஜோகூர் பாரு: ஜோகூரின் நான்கு வட்டாரங்களில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பெரியளவிலான சோதனைகளில் சிங்கப்பூரர் உள்பட ஐந்து ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு $2.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
ஜோகூர் காவல்துறை தொடங்கிய ஐந்து நாள் சோதனை, ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 24ஆம் தேதிவரை நடைபெற்றது. ஜோகூர் பாரு, பத்து பஹாட், கோத்தா திங்கி, குளுவாங் ஆகிய வட்டாரங்களில் செயல்படும் கும்பல்களைக் குறிவைத்து சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
சோதனை நடவடிக்கை மூலம் சையாபு, கெட்டமின், எரிமின், கஞ்சா, போதைமிகு அபின் என 8.97 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் விநியோகக் கட்டமைப்புகளைக் களைவதில் காவல்துறைக்கு இருக்கும் உறுதியை வெற்றிகரமாக நடந்துமுடிந்த சோதனை நடவடிக்கைகள் காண்பிக்கிறது என்றார் ஜோகூர் காவல்துறை தலைமை கமிஷனர் எம் குமார்.
“சிங்கப்பூரர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களைக் கைதுசெய்திருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டிருக்கிறோம்,” என்ற திரு குமார், கைதுசெய்யப்பட்டோர் 22 வயதுக்கும் 47 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றார்.
பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்ட அடுக்குமாடி வீடுகளிலும் வாகனங்களிலும் போதைப் பொருள்களைப் பதுக்கி விநியோகம் செய்யும் வழிகளை இந்த நடவடிக்கை முறியடித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
டங்கா பே வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தேக நபர் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டதை அவர் பகிர்ந்துகொண்டார்.
கைதான ஆடவர்மீது சிங்கப்பூரில் ஏற்கெனவே குற்றப்பதிவு இருப்பது கண்டறியப்பட்டது என்றும், ஆடவர் போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமானது என்றும் திரு குமார் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விசாரணைக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

