ஜகார்த்தா: இந்தோனீசிய பங்குச் சந்தை, செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 8) காலை வர்த்தகம் தொடங்கிய முற்பகுதியில் ஒன்பது விழுக்காடு வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து முப்பது நிமிடத்துக்கு பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்நாட்டின் ரூப்பியாவின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 1.8 விழுக்காடு குறைந்தது.
இந்தோனீசியாவில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க் கிழமை பங்குச் சந்தை திறக்கப்பட்டது. அமெரிக்க வரி விதிப்பால் உலகச் சந்தை ஆட்டம் கண்டுள்ள நிலையில் இந்தோனீசிய பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.
முக்கிய பங்குச் சந்தை 9.2 விழுக்காடு சரிந்தது. இது, 2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஆக மோசமான சரிவாகும். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூப்பியாவின் மதிப்பு 16,850க்குக் குறைந்தது.
மார்ச் 27ஆம் தேதி மூடப்பட்ட இந்தோனீசிய பங்குச் சந்தை செவ்வாய்க் கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது உலக வர்த்தகப் பதற்றத்தை அது எதிரொலித்தது.
அமெரிக்கா, இந்தோனீசியாவுக்கு 32 விழுக்காடு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.