9 வெளிநாட்டு தொற்று; சமூகத்தில் ஒன்றுமில்லை

9 வெளிநாட்டு தொற்று; சமூகத்தில் ஒன்றுமில்லை

2 mins read
331d9f11-52c6-4665-a69e-75798ede312b
சைனாடவுன் காம்பிலெக்ஸ் கடை உரிமையாளருக்கு வந்த கொவிட்-19 கிருமித்தொற்று தமது குடும்பத்தினருக்கும் பரவுயுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் (பிப்ரவரி 13ஆம் தேதி) நிலவரப்படி, புதிதாக 9 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த 9 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் சமூகத்திலோ வெளிநாட்டு தங்குவிடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆறு வாரங்களில் பதிவான ஆக குறைந்த கிருமித்தொற்று எண்ணிக்கையாக இது அமைகிறது.

சைனாடவுன் காம்பிலெக்ஸில் கிருமி குழுமம்

சைனாடவுன் காம்பிலெக்ஸ் கடை உரிமையாளருக்கு வந்த கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் அவரது மனைவிக்கும் இரு மகன்களுக்கும் அந்நோய் தொற்றிட, ஒரு புதிய கிருமி குழுமம் உருவாகியுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டது.

அந்த கடை உரிமையாளர் 66 வயது நிரம்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசி. ஜனவரி 28ஆம் தேதி இருமலும் பிப்ரவரி 9ஆம் தேதி முகரும் தன்மையை இழந்தது போன்ற உணர்வையும் அனுபவித்தார் ஆனால் அதன் தொடர்பில் மருத்துவரைக் காண செல்லவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சைனாடவுனில் நடந்த சமூக கண்காணிப்பு சோதனையில் இவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது.

இரண்டு நாட்கள் கழித்து, அவரது 62 வயது மனைவிக்கும் 32 மற்றும் 33 ஆகிய வயதுடைய மகன்களுக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

கடை உரிமையாளரின் இளைய மகன் சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் சுவென்சன் உணவகத்தில் பகுதி நேர காசாளராக பணியாற்றுகிறார்.

கடை உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும் 'டிரேஸ்டுகெதர்' செயலியை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

'டிரேஸ்டுகெதர்' டோக்கன்களை அவர்கள் வைத்திருந்தபோதிலும் வெளியே செல்லும்போது அவற்றை எடுத்துச் செல்லவில்லை.

'டிரேஸ்டுகெதர்' செயலியை பயன்படுத்தினால் அல்லது 'டிரேஸ்டுகெதர்' டோக்கன்களை பயன்படுத்தினால் மட்டுமே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடும் அபாயத்தில் உள்ளோரை அடையாளம் கண்டு கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சு நினைவுபடுத்துகிறது.