கிருமித்தொற்றால் ஹாங்காங் விலங்கியல் தோட்டத்தில் மாண்ட 9 குரங்குகள்

கிருமித்தொற்றால் ஹாங்காங் விலங்கியல் தோட்டத்தில் மாண்ட 9 குரங்குகள்

1 mins read
1bdb378b-0980-4f30-9a22-b36a365f6c70
குரங்குகள் தங்குமிடத்தில் மண்ணைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாசுபட்ட மண் ஊழியர்களின் காலணிகள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  - படம்: ஹாங்காங் விலங்கியல், தாவரவியல் தோட்டம் / ஃபேஸ்புக்

ஹாங்காங்: ஹாங்காங் விலங்கியல், தாவரவியல் தோட்டத்தில் ஒன்பது குரங்குகள் மாண்டதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மரணங்களுக்கு கிருமித்தொற்றே காரணம் என்று தெரியவந்துள்ளது.

உடற்கூராய்வுச் சோதனை அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டதாக ‘ஸ்கை நியூஸ்’ கூறியது.

எட்டுக் குரங்குகள் அக்டோபர் 13ஆம் தேதியும், ஒரு குரங்கு அதற்கு மறுநாளும் உயிரிழந்தன.

அந்த விலங்குகளின் வழக்கத்துக்கு மாறான நடத்தையைக் கண்டபிறகு, அதிகாரிகள் விலங்கியல் தோட்டத்தின் பாலூட்டிப் பகுதியைச் சோதனைக்காகவும் கிருமி நீக்கும் பணிகளுக்காகவும் மூடினர்.

மாசுபட்ட மண் அல்லது தண்ணீருடன் தொடர்பில் வந்ததால் ‘மிலியோயிடோசிஸ்’ (melioidosis) எனும் அக்கிருமி ஏற்பட்டதையும் அதனால், குரங்குகள் மாண்டதையும் ஹாங்காங்கின் கலாசார, விளையாட்டு, பயணத்துறைச் செயலாளர் கெவின் யியுங் உறுதிப்படுத்தினார்.

மாதத் தொடக்கத்தில் விலங்கியல் தோட்டத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன. குரங்குகள் தங்குமிடத்தில் மண்ணைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாசுபட்ட மண் ஊழியர்களின் காலணிகள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எஞ்சியிருக்கும் குரங்குகளைத் தனிமைப்படுத்தி, மாசுபட்ட இடங்களைச் சுத்தம்செய்து, எதிர்காலத்தில் அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்