சிறார் நீர் விளையாட்டுத் திடலில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் காயம்

1 mins read
காயமடைந்தோரில் 8 வயதுக் குழந்தையும் அடங்கும்
e53495bd-457d-4777-882a-33421ca9b4c6
சந்தேக நபர் சனிக்கிழமை (ஜூன் 15) மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் காவல்துறை கூறியது. - படம்: டெரென்ஸ்_எஸ்டிஆர்/எக்ஸ் தளம்

மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள, சிறுவர்களுக்கான நீர் விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை (ஜூன் 15) துப்பாக்கிக்காரர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தோரில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று காவல்துறை தெரிவித்தது.

‘புரூக்லேண்ட்ஸ் பிளாசா ஸ்பிளாஷ் பேட்’ எனும் நீர் விளையாட்டுத் திடலில் நடந்த சம்பவம் குறித்து சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.

துப்பாக்கிக்காரர் வாகனத்திலிருந்து இறங்கி, நீர் விளையாட்டுத் திடலை அணுகி சுடத் தொடங்கியதாகவும் பின்னர் தோட்டாக்களை நிரப்பிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சுட்டதாகவும் மீண்டும் தோட்டாக்களை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து அகன்றதாகவும் தெரிகிறது என்று ஓக்லாந்து நகர ஷெரிஃப் மைக்கேல் பூஷா கூறினார்.

துப்பாக்கிக்காரர் 28 முறை சுட்டதாக அவர் சொன்னார்.

சந்தேக நபர் அருகில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்நிலை குறித்த மேல்விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறிய ஷெரிஃப் பூஷா காயமடைந்தவர்களில் 8 வயதுக் குழந்தையும் அடங்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்