கராக்கஸ்: வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் 900க்கும் அதிகமானோர் மாண்டதை அடுத்து உயிருடன் இருப்போரைத் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தீவிரமடைந்துள்ளன.
தேடல், மீட்புப் பணிகளில் வெனிசுவேலா மக்களும் உள்ளுர், வெளியூர் மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.
நிலநடுக்கத்துக்குப்பின் இரண்டு நாள்கள் கழித்தே சேதமடைந்த வட்டாரங்களுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டன.
இடிபாடுகளில் கிட்டத்தட்ட 172 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாக வெனிசுவேலா அரசாங்கம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் 920 பேர் மாண்டனர்; 3,360 காயமடைந்தனர்.
தலைநகர் கராக்கசிலும் அருகில் உள்ள மராக்கேயிலும் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஜூன் 26ஆம் தேதி பிற்பகல் வாக்கில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
லா குவாரா மாநிலத்தில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோரை மீட்க மக்களும் தொண்டூழியர்களும் கைகளால் நிலத்தைத் தோண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
7.2 ரிக்டர் அளவிலும் 7.5 ரிக்டர் அளவிலும் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் உண்டான சேதத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 6.7 பில்லியன் டாலர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் நூறாண்டுகளில் ஆக வலுவானது எனத் தெரிவிக்கப்பட்டது.
கராக்கஸ், வெலன்சியா ஆகிய பகுதிகளிலிருந்து மோட்டார்சைக்கிள்கள் மூலம் நிவாரணப் பொருள்களைத் தொண்டூழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்றனர்.
இந்நிலையில், காடிய ல மார், லா குவாய்ரா ஆகிய வட்டாரங்களில் சேதமடைந்த கடைகளிலிருந்து சமையல் எண்ணெய், ரொட்டி போன்ற பொருள்களை மக்கள் எடுத்துச் சென்றனர். அதனைக் காவல்துறை அதிகாரிகளும் தேசியப் பாதுகாவலாளர்களும் தடுத்து நிறுத்தவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இவ்வேளையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிகஸ், மிகப் பெரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

