ஒரே ஆண்டில் 90,000 சட்டவிரோதக் குடியேறிகள் மலேசியாவில் கைது

2 mins read
1b2e8c13-43d8-4f12-a0bd-bf67f02e7a78
50,000 பேரைப் பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதற்கு அதிகமான சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். - கோப்புப் படம்: த ஸ்டார்

புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஆண்டு முறையான ஆவணங்கள் எதுவுமில்லாத 90,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பிடிபட்டதாக அந்நாட்டின் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி இருக்கும் 50,000 பேரைப் பிடிக்க தொடக்கத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆனால், தீவிர நடவடிக்கைகளின் பலனாக அதைவிடக் கூடுதலானோர் அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் கூறினார்.

“ஆவணமற்ற வெளிநாட்டினர் அதிகமாக நடமாடும் இடங்களைக் கண்டுபிடிக்கும் பணியை மேலும் தீவிரமாக்க உள்ளோம். சட்டவிரோத வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஓய்ந்துவிட மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தொழிற்சாலைகளிலும் குறிப்பிட்ட சில இடங்களிலும் வெளிநாட்டினர் பதுங்கி இருக்கும் இடங்களைத் தேட இந்த ஆண்டு குடிநுழைவுத் துறையுடன் மேலும் பல அமைப்புகளும் இணைந்து கூட்டு முயற்சிகளில் இறங்க உள்ளோம்.

“அதிகமான வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் புகுந்துவிட்டதாகவும் மலேசியர்களுக்கானப் பல்வேறு பொருளியல் நடவடிக்கைகளில் வெளிநாட்டினரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகவும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

“சட்டவிரோதக் குடியேறிகள் அதிகமாகத் தென்படும் தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள் ஆகியவற்றுடன் இதர இடங்களிலும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்த உள்ளோம்.

“இந்த ஆண்டு முழுமைக்கும் 1,200 அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது குடிநுழைவுத் துறையின் திட்டம்.

“ஆவணமற்ற, சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்வதே குடிநுழைவுத் துறையின் இவ்வாண்டுக்கான முன்னுரிமைப் பணியாக இருக்கும்.

“அத்துடன் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதனை மூன்று அம்சங்கள்வழி செயல்படுத்த உள்ளோம்,” என்றார் திரு ஸக்காரியா.

அதிகாரபூர்வ ஆவணங்கள் வைத்திருக்கும் வெளிநாட்டினர் பாதுகாப்புச் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், அகதி அல்லது அடைக்கலம் நாடுவோராக அவர்கள் பதிவு செய்யப்படுவர் என்று அந்தத் திட்டத்தை அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்