ஜெனிவா: உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர் என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது.
விழித்திரையில் மேகமூட்டம் போல உருவாகும் கண்புரை, படிப்படியாக பார்வையை மங்கலாக்குகிறது. கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் பார்வை இழப்பை அது ஏற்படுத்திவிடும்
உலக மக்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப கண்புரை நோயும் அதிகரித்து வருகிறது. வயது மூப்புதான் கண்புரைக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், அந்நோய் நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை (பிப்ரவரி 11) அறிக்கை வெளியிட்டது.
“கண்புரைக்கான அறுவை சிகிச்சை 15 நிமிடங்களில் செய்யப்பட வேண்டியது. மிகவும் செலவு குறைந்த மருத்துவ நடைமுறை என்பதோடு பார்வை இழப்பைத் தடுப்பதற்கான உடனடி சிகிச்சை அது,” என்று அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“வசதிபடைத்த நாடுகளில் கண்புரை அறுவை சிகிச்சை இயல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஆயினும், கண்புரையால் பாதிக்கப்படும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஸ்டூவர்ட் கீல் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக, ஆப்பிரிக்க வட்டாரத்தில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு கண்புரை நோய் கண்ட நான்கில் மூவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இருந்தும் அவர்களுக்கு அந்தச் சிகிச்சை கிடைக்கவில்லை.
“அதேபோல, கென்யாவில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோரில் 77 விழுக்காட்டினர் கவனிப்பாரின்றி உள்ளனர். அதனால், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டு நடைபிணமாக அவர்கள் வாழ்கின்றனர்,” என்றார் டாக்டர் கீல்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் எல்லா நாடுகளிலும் கண்புரையால் பாதிக்கப்படும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே குறைவான பராமரிப்பு கிட்டுகிறது.
“உலக அளவில் 94 மில்லியன் பேர் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் குறைவானோர் பார்வையை இழந்துவிட்டனர். எஞ்சியோர் பார்வைக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

