மும்பை: மும்பையில் 955 ஹெக்டேர் சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 9,000க்கும் அதிகமான சதுப்பு நிலங்கள் உள்ளன. இவற்றுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், வனசக்தி எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏழு கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சதுப்பு நிலங்களை மாநில சதுப்பு நிலப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டுமென என உத்தரவிட்டது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் 955 ஹெக்டேர் நிலம் சதுப்பு நிலப் பிரிவின் கீழ் வந்தது.
1980 வனப் பாதுகாப்புச் சட்டம்,1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாநில சதுப்பு நிலப் பிரிவு அறிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட இந்த நிலப்பகுதியில் இனிமேல் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது.
“கொங்கன் கடற்கரை பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களில் சதுப்பு நிலக் காடுகள் மகாராஷ்டிரா பாதுகாப்புப் படை, வனத்துறைப் பணியாளர்கள் மூலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது,” என்று கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.வி. ராமராவ் தெரிவித்தார்.
“கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்கிரமிப்பையும் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்கும் வகையிலும் முக்கியமான பகுதிகளில் வேலி அமைத்தல், சுவர் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சதுப்பு நிலங்களை வெட்டுவதற்கு எளிதில் அனுமதி வழங்கப்படுவதால், இந்த நடவடிக்கை அவற்றைப் பாதுகாக்க உதவும்,” என்று அவர் கூறினார்.

